திருமணமாகி பெங்களூரில் மாமனார் மாமியார் என கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.உறவுகளை கையாளுவதில் என்னுடைய பலகீனத்தினால் பல முறை காயப்பட்டு அதிலிருந்து வெளிவருவது மிகவும் சிரமமாக இருந்தது. நான் கூறுவது மிக சாதாரண பிரச்சனையாக படலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமாக வாழ்க்கைப்பாடம் நடத்தப்படுகிறது. இதில் திருமணமான பெண்களுக்கு மிக சுவாரஸ்யமாக அழுத்தமாக பாடம் கற்பிக்கப்படுகிறது. வாழ்க்கை எனக்கு கற்றுகொடுத்த பாடங்களை இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
சுயத்தை மதிக்க தெரியாத எவருக்கும் வாழ்க்கை சுமையே !!! நாம் நம்மை மதிக்காதபோது மற்றவர் மீது குறை கூறி என்ன பயன். பல நேரங்களில் நமக்கு அன்பிற்கும் அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. மற்றவர்கள் நம்மை தவறாக நினைக்ககூடாது என்ற எண்ணத்தினாலேயே மற்றவர் விரும்பும்படி நடந்து நம் சுயத்தை இழக்கிறோம். நாம் செய்கின்ற செயல் சரி என்ற நம்பிக்கை எழுமெனில் நாம் மற்றவரின் நன்மதிப்பை பெரும் எண்ணத்தில் ஒரு செயலை செய்யமாட்டோம்.இது மிகப் பெரிய விடுதலை...இது திருமணமாகி கணவர் வீட்டில் கூட்டு குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு மிகவும் பொருந்தும்.
மாமனாருக்கு இது பிடிக்கும் கணவர் இப்படி நடந்தால் சந்தோஷப்படுவார் என தன்னைப்பற்றி அக்கறை இல்லாத மாதிரி தங்களை தியாக தீபமாக நினைத்து கொண்டு நிறைய பெண்கள் நடந்து கொள்கிறார்கள். (என்னையும் சேர்த்துத் தான்). ஒரு குடும்பத்தில் மற்றவரின் உணர்ச்சிகளை புரிந்து நடப்பது முக்கியமே, அதற்கென்று நம் கருத்திற்கு முக்கியத்துவம் தராமல் நாமே நடந்து கொள்வது அவசியமற்றது!! இதில் என்ன கொடுமை என்றால் மற்றவரின் எதிர்பார்ப்பு கொஞ்சம் என்றால் நாமாய் கற்பனை செய்து கொள்ளும் விஷயங்கள் நிறைய !!! மற்றவரின் ஆசைகளை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கென கடவுள் நம்மை படைக்கவில்லை.
திருமணமான பிறகு நிறைய பெண்களுக்கு கற்றல் என்பது நின்றுவிடுகிறது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமலே வீட்டின் உள்ளேயே பல நாட்கள் கழிந்து விடுகின்றன. சரிநிகர் சமானமாக வாழ நம் அறிவை பலப்படுத்திக் கொள்ளுதல் மிக அவசியம். நம் தினசரி நிகழ்வுகளோடு உலகின் நிகழ்வுகளையும் அறிந்து கொள்வது, உபயோகமான நம் வளர்ச்சிக்கு வழி செய்யும் புத்தகங்களைப் படிப்பது, தினம் ஏதேனும் ஒரு திருக்குறளையோ ஒரு தமிழ் பாடலையோ மனனம் செய்வது இப்படி நமக்கு பிரியமானவற்றை செய்து நம் மனதிற்கு தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்றுவது மிகவும் அவசியம்.
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை எழ,யார் மேலும் விரோத எண்ணங்கள் எழாமல், யார் மனதையும் புண்படுத்தாது அதே சமயம் நம்மையும் நாம் புண்படுத்திக் கொள்ளாது வாழ இறையருள் மிகவும் அவசியம். தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா !!! என்ற பாரதி ஐயாவின் வரிகளை மனதில் கொள்வோம்.இறையுடன் ஒன்றிய வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல பார்த்தசாரதி நம் வாழ்க்கைக்கும் வழிகாட்டுவான் துணைவருவான் என்பது நிச்சயம். பகிர்வைத் தொடர்வோம் !!!!


No comments:
Post a Comment