நம் பாப்பாவிற்கு தாய்ப்பால் தவிர மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று குழந்தை மருத்துவர் ஆலோசனை வழங்கிவிட்டார். எதைக் கொடுப்பது எதை விடுவது என்று ஒரே குழப்பம். கர்நாடகாவில் கேப்பை என்னும் கேழ்வரகு மிகவும் பிரசித்தம். சரி, சிறுதானியத்திலிருந்து தொடங்குவோம் என நம் உறவினர் ஒருவரிடம் கேழ்வரகு கஞ்சியைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அவர் கூறிய முறைப்படி கஞ்சி கொடுக்க ஆரம்பித்தாகி விட்டது.
நல்ல தரமான கேழ்வரகு கடையில் வாங்கி வந்து, அதனை நன்கு களைந்து 4-5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு வடிகட்டிவிட்டு ஒரு நல்ல வெள்ளை துணியில் கட்டி வைத்துவிட வேண்டும். காலையில் பார்த்தால் குட்டி குட்டி முளைகள் தலை தூக்கிப் பார்க்கும். ஓரளவு நன்கு முளை நீளமாக வரும் வரை காத்திருங்கள். இதைப் பார்க்கவே அவ்வளவு குஷியாக இருக்கும்.
நல்ல முளை வந்தபின் தாம்பாளத்தில் கொட்டி அதனை நன்கு காய வைக்கவும். நன்கு உலர்ந்தவுடன் இயந்திரத்தில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது குட்டிப் பாப்பாவிற்கு மட்டுமல்ல , நம் போன்ற பெரிய்ய்ய பாப்பாக்களும் குடிக்க ஏற்ற கஞ்சி. நமக்கு இன்னும் இதனுடன் கொஞ்சம் பாதாம், ஏலக்காய் கூட சேர்த்து அரைத்துக் கொண்டால் பலமோ பலம்! நிறைய வம்பு பேச எனக்கு தெம்பு கொஞ்சம் ஜாஸ்தி தேவைப்படுது பாருங்க!!
வெய்யில் இல்லாத ஊரில் வசிப்பவர்கள் முளை கட்டிய கேழ்வரகை நன்கு நிழலில் உலர்த்தி பின்பு ஒரு வாணலியில் வறுத்து ஆறவைத்து பின்பு இயந்திரத்தில் கொடுத்து அரைத்து வைக்கலாம். பாப்பாவிற்கு கொடுக்கும் கஞ்சியை நன்கு ஜலித்து உபயோகப்படுத்தினால் குடிப்பதற்கும் ஜீரணிப்பதற்கும் எளிதாக இருக்கும்.
6 மாதத்திற்கு குறைந்த குழந்தைகளுக்கு வேறு இன்னும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய கஞ்சி தயார் செய்யலாம். எவ்வளவு தேவையோ அவ்வளவு கேழ்வரகை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மதிய வேளையில் கொடுக்க காலையில் எழுந்தவுடன் ஊறவைப்பது போதுமானது. ஊற வைக்கும் போதே நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். பின்பு நன்கு mixie யில் அரைத்து நன்கு வடிக்கட்ட வேண்டும். நல்ல நீர் கலந்து தேங்காய்ப்பால் எடுப்பது போன்று பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பை சிறிய தீயில் வைத்து இந்த பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்க மணமான கஞ்சி கிடைக்கும்.
இந்தக் கஞ்சியை பெரியவர்கள் மோர் கலந்தோ பால் கலந்தோ அருந்தலாம். நல்ல சக்தி தரக்கூடிய எளிய உணவு இது.