Monday, 16 June 2014

குலாப்ஜாமுன் பிறந்த கதை


வெயிலோ மழையோ சுடச்சுட ஜீராவில் முங்கிய சாப்ட் சாப்ட் குலாப்ஜாமூன் சாப்பிட எப்படி இருக்கும். ஸ்பூனால் எடுக்கும் போதே குஷியோ குஷி.....ஜொள்ளோ ஜொள்ளு !!!...ஆனா நான்  ஜொள்ள வந்தது...சாரி சொல்ல வந்தது  இந்த குலாப்ஜாமூன் பத்தி இல்லை!!...எங்க வீட்ல அம்பாளா பொறந்திருக்கற குட்டி செல்லம் சரிகா என்கிற குலாப்ஜாமூன் பத்தி....
ஸ்கூலில் டீச்சர் ஆக வேலை பார்த்ததால் பெங்களூர் ல் கணவர் வீட்டில் இருந்த வரை ஸ்கூல் ம் வீடுமாக நேரம் ஓடியதே தெரியவில்லை.இத்தனை ஓட்டத்திலும்  மாமியார் மாமனாரின், அக்கம்பக்கத்து நண்பர்களின் அன்பான கவனிப்புகள் மனதை  நிறைக்கவே செய்தன.திரும்பிப்பார்க்கும் முன் 7 மாதங்கள் ஓடி சென்னையில் இருக்கும் அம்மா வீட்டுக்கு பொட்டி படுக்கையுடன்  வந்தாயிற்று.
ஒரு வழியாக அம்மா வீட்டுக்கு  வந்து செட்டில் ஆகி 2 மாதங்கள் ஓடி எல்லா சிஸ்ருஷைகளும் அனுபவித்தாகி விட்டது.முதல் டெலிவரி என்பதால் ஒரு மாதம்  முன் கூட்டியே டெலிவரி ஆகிவிடும் என்று வீட்டு பெரியவர்கள் எல்லோரும் கிலியை கிளப்பி விட அது பக்கத்துக்கு தெருவில் இருக்கும் லைப்ரரிக்கு போகவே  வயிற்றில் புளியை  கரைத்தது.

தேதி நெருங்க நெருங்க வீட்டில் எல்லோர் பீ .பி  யும் தினம் ஏறி இறங்கியது.மாடிப்படி ஏறி  இறங்கினால் நார்மல் டெலிவரி ஆகும் என்று ஒரு தூரத்து சொந்த அம்மணி கூற மாடி ஏறி ஏறி நடவா நடவென நடந்து கால் வலித்ததே மிச்சம். டாக்டர் ம் என்னம்மா ஊர்ல இருக்கற சொந்தமெல்லாம் வந்தாச்சு உனக்கு வலி தான் வரமாட்டேன்குது என்று சலித்து கொண்டே டேட் கிராஸ் ஆனதால் வந்து அட்மிஷேன் போட்டுடுங்க என்று சொல்ல ஒரு வழியாய் எல்லா இத்யாதிகளையும் பாக்  செய்து கொண்டு ஏதோ ரிசார்ட் ல்  ரூம் புக் செய்தது போல் ஒரு ஏ.சி ரூம் ல் சகல சௌரியங்களுடன் செட்டில் ஆகி விட்டது.
ஏதேதோ செய்து பார்த்தும் நம்ம லிட்டில் குலாப் ஜாமூன் வெளியில் வர தர்ணா செய்ததால் எல்லோர் பொறுமையும் எல்லை மீறி ஆபரேஷன் செய்து குலாபை கையில் கொடுத்தனர். நிஜமாகவே அம்பாள் பிரத்யக்ஷமாக குலாப் ஜாமூனாக நம்முடன் இருந்ததை உணர்ந்தோம்.  ஜெய் மா!!! ஜெய் ஜெய் மா !!!




முன்பின் ஆபரேஷன் ஆகாததால் ஒரு வேகத்தில் எல்லாம் நல்லபடியாக முடிந்ததென்று வாய் ஓயாது பேசி வெகு விரைவில் சூம்பிப்போன மாங்கொட்டை போல் ஆகிவிட்டேன். அப்பொழுது வந்த நர்ஸ் நீங்க 36 மணிநேரம் வரை தண்ணீர் எல்லாம் குடிக்க கூடாது என்று ஒரு குண்டை தூக்கி போட அம்மா!! ஜனனி!!! இது என்ன கொடுமை இந்த உண்மையை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லவே இல்ல....:-(
எத்தனை உடல் உபாதைகள் இருந்தாலும் நம் குலாப் ஜான் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியை கொடுத்தாள். முதல் நாள் அனுபவம் யார் குழந்தையை பார்க்க வேண்டும் என்று வந்தாலும் உண்ணாவிரதத்தில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர் போல் வாயை  மூடிக்கொண்டு  ஒரு கும்பிடு போட வைத்தது.

எங்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் கட்டுடா வண்டிய என்று ஓடி போய் பார்க்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள் .........புது இடம் யாரையும் தெரியாமல் கஷ்டப்படும் குழந்தை....எப்படி பால் கொடுப்பது எப்படி பார்த்து கொள்வது என்று தூக்கமின்றி பயத்தில் இருக்கும் அம்மா ...அதை விட டென்ஷன் ல் வீட்டில் அவசர அவசரமாக சமையல் முடித்து வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலையும்   குடும்பத்தினர் !!...நம்மால் முடிந்தது குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்கு அந்த பக்கம் போவதையே விட்டு விடுங்கள்...வீட்டில் அனைவர் உடலும் தேறி ஒரு மாதம் ஆன பின்னர் உங்களை அன்புடன் வரவேற்று தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வர். தப்பா எடுக்க வேணாம் அம்மணியோவ்!!!! அனுபவத்துல சொன்னேன்!!