கர்நாடக மாநிலத்தில் எங்கு செல்வதானாலும் முதலில் கை உயர்த்தி ரெடி சொல்வது நான் தான். இயற்கை அன்னை இம்மி கூட கஞ்சத்தனம் இல்லாது வாரி வாரி அளித்த செழுமை எங்கு நோக்கினும் மனதை நிறைக்கும் பூமி கர்நாடகம். நான்கு நாட்கள் நம் ரங்குவிற்கு விடுமுறை. எங்காவது போகலாமே என்று ஒரு பிட்டைப் போட்டு வெள்ளிக்கிழமை அலுவலகம் சென்றார். உடனே களத்தில் இறங்கி ஒரு அதிரடி பிளான் போட்டு ஒரு மூன்று நாட்கள் சுற்றுலாவிற்கு ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. எந்த வேலை பண்ணினாலும் பிளான் போட்டு தான் பண்ணுவோம். நாங்க எல்லாம் வடிவேலுக்கு அண்ணன்மார்கள்!
தீபாவளி அன்று விடிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து புதுஉடை உடுத்தி பரபரவென்று சிற்றுண்டியை உள்ளே தள்ளி இன்னோவாவில் புறப்பட்டோம். பெரியோர்களுடன் இந்த மாதிரி சுற்றுலாக்கள் செல்வது ஒரு பயங்கர ஜாலியான அனுபவம். காலை 9 மணி அளவில் காவேரி அன்னையை மனதில் பிரார்த்தனை செய்த படியே பயணத்தை துவக்கினோம். மைசூரின் அருகில் உள்ள சோமநாத்பூர் எங்களின் முதல் ஸ்பாட். ஹொய்சாலா ராஜ்யத்தின் மிகச்சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலையை இங்கு காணலாம். நின்று நின்று பார்த்தாலும் எத்துணை முறை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள். நன்கு பராமரிக்கப் பட்டு வரும் கோவில் இது. முகலாய படையெடுப்பில் சிதிலம் அடைந்த சிற்பங்கள் பல. சிற்பங்கள் சிதிலம் அடைந்திருப்பதால் இங்கு பூஜைகள் கிடையாது.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Archeological Survey of India )கீழ் இந்த கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. (கழிப்பறை வசதியும் உண்டு.)
இது போன்ற சுற்றுலாக்கள் செல்லும் போது மிகவும் முக்கியமான ஒன்று சுத்தமான கழிப்பறைகள். இந்த கோவிலின் வெளியில் ஒரு பெரிய மரம் , அதனை சுற்றி அமர்வதற்கு இடம் மென்மையான காற்று , அங்கிருந்து கிளம்பவே மனம் இல்லை.
சோம்நாத்பூரிலிருந்து புறப்பட்டு மடிகேரி நோக்கி நகர்ந்தோம். மதிய உணவு உட்கொண்டு அடுத்து நேரே அப்பை நீர்வீழ்ச்சி (Abbi waterfalls ) . விடுமுறை தினம் என்பதால் கூட்டம் களை கட்டியது. பெரியவர்களுக்கு கொஞ்சம் கடினமான ட்ரெக் இது. (கீழே இறங்கும் போது மேலே பெருமூச்சு விட்டுக்கொண்டு ஏறி வரும் பயணிகளை நோட் செய்வதை தவிர்க்கவும். ) புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு நடையாக இருந்தது. நீரின் ஓசையை கேட்டுக் கொண்டே நடந்து நடந்து நீர்வீழ்ச்சியின் அருகில் பயணித்தோம். நம் ரங்கு கல்லூரியில் படித்த காலத்தில் நீர்வீழ்ச்சியின் நடுவில் பாறையில் நின்று கொண்டு ஒரு போஸ் உண்டு. இப்போது தொலைவில் நின்று selfie எடுக்க மட்டுமே முடியும். பரவாயில்லை இதுமட்டும் காணும் வாய்ப்பாவது நமக்கு கிடைத்ததே! நம் குட்டிக்கு நீரில் கால் வைக்க முடியாதது படு துக்கம். அவளை சமாதானப்படுத்திக் கொண்டே மேலே ஏறினோம்.
| அப்பை நீர்வீழ்ச்சி |
அடுத்து என் நீண்ட நாள் கனவு - மடிகேரியில் இரவு தங்க ஏற்பாடு. (புதிதாய் கேள்விப்படுபவர்களுக்கு Coorgum madikeriyum ஒன்றே...எனக்கே இப்போ தாங்க தெரியும்...ஹி ஹி ஹி )Coorg ல் Homestay செய்வதற்கான இடங்களே அதிகம். ரம்மியமான சூழல்...வார்த்தைகள் இல்லை இந்த அழகை வர்ணிப்பதற்கு. மீனாக்ஷி என்பவரின் மனையில் தங்கவுதற்கான ஏற்பாடு செய்திருந்தார் ரங்கு. ஒரு உடுப்பி ஹோட்டலில் நல்ல சிற்றுண்டி கழித்து அவர் மனை நோக்கி பயணித்தோம். மெயின் ரோட்டிலிருந்து ஒரு 6 கி.மீ பயணித்து ஒரு மலைப்பாதை வழியாக ஒரு 0.5 கி.மீ சென்றதும் அவர் வீட்டை அடைந்தோம். அவர் வீட்டு மாடியில் இரண்டு அறைகள் தங்கும் வசதிக்கென்றே இருந்தன. சுத்தமான அறைகள் சௌகரியமான படுக்கை நல்ல சூழல் .நல்ல இரவு ஓய்வுக்கு பிறகு காலை 6 மணிக்கு தலைகாவேரிக்கு புறப்பட்டோம்.
குழந்தை இரவெல்லாம் நெஞ்சு சளியால் இருமவே நான் தலை ஸ்நானம் செய்ய யோசித்தேன். காவேரி அன்னையின் உற்பத்தி ஸ்தலத்தை தரிசனம் செய்து முடிந்த வரையில் கை கால் தலை ஸ்நானம் செய்தோம். தண்ணீர் என்பதற்கு சரியானபடிக்கு இருந்தது. கைகளை வைத்ததும் சிலீரென்று தலைக்கு உரைத்தது குளிர். சின்ன சதுரமான இடம் காவேரியின் உற்பத்தி ஸ்தலம். அதனை ஒட்டிய ஒரு சிறிய குளம் நிறைய தண்ணீர் அதில் மூழ்கி எழுந்து தலைகாவேரி அருகில் வர அங்கு இருக்கும் பூஜாரி அந்த சதுரமான காவேரி உற்பத்தி ஸ்தலத்திலிருந்து நீர் எடுத்து நம் மேல் ஊற்றுகிறார். நீரில் வெகு நேரம் இருக்கவோ நீந்தவோ இங்கு அனுமதி இல்லை. குட்டி சரிகாவிற்கு இந்த இடம் மிகவும் பிடித்துப் போகவே ரங்கு இன்னொரு முறை அவளை அழைத்துச் சென்றார். இத்தனை பயணிகள் வந்த போதிலும் வெகு சுத்தமாக பக்தியுடன் இந்த இடம் பராமரிக்கப்படுகின்றது .
| தலை காவேரி |
| பாகமண்டலேஸ்வரர் திருக்கோவில் |
நேரே பாகமண்டலேஸ்வரா கோவிலுக்கு சென்றோம். கேரள ஸ்டைல் இல் அமைந்த அழகான கோவில். பாகமண்டலேஷ்வரரை தரிசனம் செய்து கொண்டு சங்கமத்திற்கு வந்தோம். (இங்கே கோவிலின் உள்ளேயே தங்குவதற்கான வசதியும் உண்டு.) கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது காவேரி கன்னிகா சுஜ்யோதி ஆகிய நதிகளின் சங்கமம். நிறைய குழந்தைகள் நீச்சல் அடித்து பெற்றோருடன் களித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.நம் குட்டி சரிகாவும் ஜாலியாக அங்கு ஒரு குளியல் போட்டது.
| காவேரி கன்னிகா சுஜ்யோதி சங்கமம் |
சங்கமத்திலிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து சிறிது ஓய்விற்கு பிறகு டுபேறே யானைகள் காம்பிற்கு கிளம்பினோம். சரிகா ஒரு பிராணிகள் விரும்பி. அங்கு சென்றால் நிறைய யானைகள் குளிப்பது விளையாடுவது கண்டு களிக்கலாம். ஆனால் 1 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. 12.30 மதியம் ரங்கு போன் செய்து விசாரித்த போது 2.30 வரை அனுமதி உண்டு என்று கூறவே மதிய உணவு ஒரு ஹோட்டலில் முடித்து கொண்டு அங்கு விரைந்தோம். நாங்கள் காம்பை நெருங்கும் வழியில் நான்கு யானைகள் சவாரிக்கு நின்று கொண்டிருந்தன. உள்ளே சென்றவுடன் தான் தெரிந்தது 1 மணியுடன் யானைகளுடனான விளையாட்டுக்கள் அத்தோடு முடிந்து விட்டன என்று. எனவே அங்கிருந்து புறப்பட்டு நேரே குஷால்நகரில் உள்ள திபெத்தியரின் புத்தர் ஆலயம் பார்க்க வியந்தோம். கண்களைப் பறிக்கும் வண்ண வண்ண ஓவியங்களும் 40 அடி பெரிய புத்தரின் சிலையும் கோவில் வெகு ரம்மியமாக இருந்தது. அங்கு பிரார்த்தனை செய்து கொண்டு மைசூரு வந்து சேர்ந்தோம்.
![]() |
| குஷால்நகர் புத்தர் கோயில் |
மைசூரில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் விடுமுறை கூட்ட நெரிசலும் அதிகம் தெரிந்தது. எனவே மைசூர் அரண்மனையும் சாமுண்டி கோவிலும் செல்ல நினைத்த நாங்கள் அந்த எண்ணத்தை கைவிட்டு ராமானுஜா ரோட்டில் உள்ள சிருங்கேரி சாரதாம்பா கோவிலுக்கு சென்றோம். அமைதியான கோவில் அற்புதமான தரிசனம் முடித்துக் கொண்டு ஹோட்டலில் உணவருந்தி நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். இரவு நல்ல உறக்கத்திற்குப் பின்னர் விடியற்காலை உற்சாகம் நம்மைப் பிடித்துக் கொண்டது. எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டு காலை சிற்றுண்டியை மைலாரி என்னும் ஒரு நல்ல உணவகத்தில் முடித்துக் கொண்டு நிமிஷாம்பாளை தரிசிக்க விரைந்தோம். எங்கள் எல்லோருக்கும் நிமிஷாம்பாள் கோவில் ஒரு தாய் வீடு போல, மனதிற்கு நெருக்கமான ஒரு தலம் . உற்சாகம் கரை புரள காவேரியில் ஒரு ஆட்டம் போட்டு நல்ல காய்கறிகள் வாங்கிக் கொண்டு வைஷ்ணவ தலமான மேல்கோட்டையை முற்றுகை விட்டோம். காரில் ஒரு இடம் வரை தான் செல்ல முடியும். அதற்கு மேல் படிகள் ஏறி செல்ல வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் கூட எப்படியோ கோவிந்தனை நினைத்துக் கொண்டே உற்சாகத்துடன் படியேறினர் . நினைத்து நினைத்து மகிழ வைக்கும் நரசிம்ம ஸ்வாமியின் தரிசனம். மலை மேலிருந்து கீழே பார்க்க இயற்கை அன்னை நம்மை கட்டி அணைப்பது தெரிகிறது.
| மேல்கோட்டை |
மேல்கோட்டையிலிருந்து கீழே இறங்க செலுவ நாராயணரின் தரிசனம். உத்சவ சமயமாதலால் கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது. கோவிலின் வெளியிலும் வரிசை நீண்டு கொண்டே போனது. சிறிது நேரம் காத்திருந்த பின் தரிசனம் முடியாமல் வரிசையிலிருந்து வெளியில் வந்து வெளிப்பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டோம். அடுத்த முறை மேல்கோட்டை செல்லும் போது அந்த திருநாராயணரை தரிசிக்க முடியும் என்று நம்புகிறோம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு வேத வேதாந்த ஸமஸ்க்ரித பாட சாலை. சமஸ்க்ரித ஆராய்ச்சியில் மேல்கோட்டை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. விக்கிப்பீடியாவில் மேல்கோட்டையைப் பற்றி படிக்க இன்னும் ஏராளமான தகவல்கள் தெரிய வரும். இந்த கோவிலைச் சுற்றி 5 தீர்த்தங்கள் உள்ளன. அதில் கல்யாணி தீர்த்தம் என்பது மிகவும் பெரியது.ஆச்சரியத்துடனும் மனநிறைவுடனும் உடம்பும் மனமும் புத்துணர்ச்சி ததும்ப அடுத்து அங்கிருந்து 30 கீ .மீ. தொலைவே உள்ள ச்ராவண பெலகொலா என்னும் ஜெயின் கோவிலிருக்கு புறப்பட்டோம். 670 படிக்கட்டுகள் அருமையான ட்ரெக். குழந்தை தூங்கிவிடவே பெரியவர்கள் எல்லோரும் அருகில் உள்ள ஒரு பூங்காவில் ஓய்வெடுத்தனர் .நானும் நம் ரங்குவும் மட்டும் 45 நிமிடங்களில் மேலே ஏறி தரிசனம் கண்டு கீழே வந்தோம். கர்நாடகாவில் எங்கு சென்றாலும் தின்பதற்கு அருமையான இயற்கை விஷயங்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். வெள்ளை வெளேரென வெள்ளரிக்காய் .. வேக வைத்த வேர்க்கடலை ..சோளம் ... அப்பப்பா ....சொர்க்கம் என்பது நமக்கு...இயற்கை கொஞ்சும் பூமி தான்....
