Sunday, 23 August 2015

வீட்டைப் பராமரிப்பது எப்படி?


       குழந்தை சரிகா பிறந்து ஒன்றரை ஆண்டு காலம் ஓடிவிட்டது. எழுவது, உண்பது ,உறங்குவது என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு ஒழுங்கையும் கடைபிடிப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. இதில் குழந்தையைக் குறை கூறிப் பயனில்லை. என்னுடைய தனிப்பட்ட சோம்பேறித்தனமும் மிகப் பெரிய காரணம். இரவு குழந்தையை நேரத்தோடு தூங்கப்போடுவது முடியாத காரியமாகவே ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறது.
        என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்து குளித்து,உடை மாற்றி, உணவு உட்கொள்ளுவதற்குள் அன்று லோக்கல் கேபிளில் எதாவது ஒரு  ரகளைக் கட்டும் படத்தைப் போட்டு விட குழந்தை ஒரே குஷியாக எல்லோருடனும் விளையாடி நடு இராத்திரியில் தூங்கத் தொடங்குகிறது. அதற்குள் நான் சாமியாடி விழுந்தே விடுகிறேன். எப்பொழுதும் போல் சொல்ல வந்ததை விட்டு சொந்த புராணத்தை எடுத்து விட்டாகி விட்டது. மன்னிக்கவும்!..எனக்கும் உங்களை விட்டா புலம்ப யார் இருக்காங்க?
        சரி , தலைப்புக்கு வருவோம். வீட்டில் இருக்கும் பொருட்களை இருக்கும் இடத்தில் வைக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டும் வீடு அல்லோல திமிலோகமாகவே காட்சியளிப்பதை உங்கள் வீட்டிலும் அனுபவப்பட்டிருப்பீர்கள். நானும் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இதற்கு காரணம் என்ன என்று என் சின்ன மண்டையை நோண்டிய போது புரிந்த சில உண்மைகள்.


1. வீட்டில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் இதில் மிக மிக அவசியம். நாம் குடித்த காபி குவளையை கையோடு அலம்பி அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தினில் கவிழ்த்தலாம். படித்த புத்தகங்களை அதற்கான பலகைகளில் அடுக்கலாம். எவ்வளவு தூரம் விழிப்புணர்வோடு கையோடு காரியங்களை முடிக்கிறோமோ அவ்வளவு நேரம் மிச்சமாக ஆக்கப்பூர்வமான பணிகளில் நேரத்தை செலவிடலாம். பெண் பிள்ளைகள் பாவமில்லையா?...வீட்டு வேலைகளிலேயே தங்களின் சக்தியை செலவழித்து விடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் ஆண்பிள்ளைகள் இந்த மாதிரி வேலைகளுக்கு பழக்கப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு அம்மாக்களின் கூடுதல் கவனிப்பும் காரணமாக இருக்கிறது. அலுவலக வேலை இல்லாத சமயங்களில் வீட்டில் பொறுப்பேற்றுக் கொண்டு சில வேளைகளில் உதவ முன்வர அந்த வீட்டுக் குழந்தைகள் கூட யாரும் சொல்லாமலே வீட்டு வேளைகளில் உதவி செய்ய முன் வருவர். குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளருவார்கள்.

2. நாட்டில் எல்லோரின் பொருட்களை வாங்கிச் சேமிக்கும் சக்தி  அதிகமாகி  உள்ளது. வீட்டில் வேலை செய்பவரிடம் சில சாமான்களைத் தள்ளலாம் என்று நினைத்தாலும், (நமக்கு அப்படி நினைக்க மனம் வருவதே கஷ்டம்) எங்கே அவர்களது  சில பொருட்களை நம் வீட்டில் தள்ளி விடுவார்களோ என்று பயம்.

3. தாத்தா பாட்டி காலத்திலிருந்து சேர்த்து வைத்து வந்துள்ள பழம் பொருட்கள் ஒரு புறம். , தேவையோ இல்லையோ பிடித்ததையெல்லாம் வாங்கிச் சேர்க்கும் குவியல் ஒரு புறம். ஒரு பொருள் நம் வீட்டில் இருப்பது பயன் தருமா, அதை என்றாவது கடந்த 3 மாதங்களில் உபயோகித்திரிக்கிறோமா என்று யோசித்து பட்டியல் போட்டோமேயானால் நமக்கே உண்மை விளங்கும். வீட்டைக் கோயிலாக ஒவ்வொரு இடத்தையும் தெய்வம் வாழும் இடமாகக் கொண்டோமேயானால் நம் வாழ்வு பல மடங்கு மேம்படும்.

வீட்டை ஒரு ம்யூசியமாக பாவித்து, தாத்தாவின் பள்ளிக்கூட சான்றிதழ்களிலிருந்து புராதன படுக்கை விரிப்பிலிருந்து எல்லாவற்றையும் போற்றிப் பாதுகாத்து வர, நாம் இருக்க மாட்டோம். பொருட்குவியல்களின் நடுவில் படுக்க கொஞ்சம் இடம் தேடிக் கொண்டிருப்போம்.

துப்பரவான ஒழுங்கான வீடு கோவில். நம் வீட்டையும் சீர்படுத்திக் கோயிலாக போற்றுவது நம் கையிலேயே உள்ளது!....வாழ்க அன்னை தேசம்!

No comments:

Post a Comment