Saturday, 22 November 2014

தெய்வம் நமக்குத் துணை பாப்பா!!

                மனிதர்கள் எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு மாதிரியான வாழ்க்கை அனுபவங்கள். நம் எல்லோர் வாழ்க்கையும் அவரவர் செய்த முன்ஜென்ம கர்மங்களைப் பொருத்தே அமைகின்றன. எத்தனையோ ஜென்மங்களுக்குப் பிறகு மிக அரிதாக நமக்கு மனிதப்பிறவி வாய்த்திருக்கிறது. கடவுள் நம்மை இம்மனிதப்பிறவிக்கு தேர்ந்தெடுத்திருப்பது வெறுமே காலத்தைக் கடத்தி மகிழ்ந்து மடிவதற்கல்ல.

             நேற்று தீபாவளிக்கு இனிப்பு தயாரிக்க எண்ணி கேழ்வரகு அல்வாவைக் கிண்டினேன். இனிப்பு நன்றாக வந்ததோ இல்லையோ ஒரு உண்மை புரிந்தது. கேழ்வரகிலிருந்து பால் எடுக்கவே அதை அரைத்து பிழிந்து எடுக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பாலும் அப்படியே சாப்பிட உகந்ததாக இல்லை. அந்தப் பாலை சர்க்கரையும் நெய்யும் சேர்த்து கிண்டோ கிண்டென்று கிண்டிய பிறகே நல்ல அல்வா கிடைக்கிறது. (சரிம்மா!! இதுல என்ன உண்மை புரிஞ்சுதுன்னு சொல்லும்மா ன்னு கத்தறது காதுல விழுந்துது!!)


             பால் மாதிரி இருக்கும் நம் வாழ்க்கையை இனிப்பும், மணமும் , இடிப்பும் சேர்த்து கடவுள் படு சுவாரஸ்யமாக பக்குவப்படுத்துகிறார். (நன்றி! நன்றி! உங்க பாராட்டுக்கு நன்றி! குருவின் அருள் இன்னும் நிறைய வெச்சுருக்கேன்! வந்துட்டே இருக்கு!)

           பகவான் நம்மை இடிப்பது நம்மை அல்வாவாக ஆக்குவதற்கே என்பது நமக்கு புரிய கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. இது மட்டும் புரிந்து விட்டால் நாம் நடந்ததை எண்ணி அழுவோமா ,அல்லது நடக்கப் போவதைக் குறித்துக் கவலையில் மூழ்குவோமா??..(நாம கொஞ்சம் அறிவு கம்மிங்க ....நொம்ப யோசிச்சு யோசிச்சு ஒன்னு ஒன்னுலையும் தெளிய வேண்டியிருக்கு!!)

          நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதில் ஒரு இம்மி அளவேனும் குறைவின்றி நமக்கு பகவான் கொடுக்கிறார். நல்ல நிகழ்வுகளோ , சோதனை நேரங்களோ நாம் அதை அனுபவிக்க முழு தகுதி உடையவர்களாக இருக்கிறோம். நாம் எல்லோரும் சாமான்ய மனிதர்களே. எல்லோர் மனமும் ஒரு ஆட்டம் ஆடாமல் அடங்குவதில்லை. நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஒரு நிகழ்வு நடக்காத போது நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம். இது இப்படி இப்படி நடந்திருந்தால் நான் சந்தோஷமாக இருந்திருப்பேன் , இவர் என்னிடம் இப்படிப் பேசியிருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும், இவர் என்னை accept செய்யவில்லை, நான் என்ன செய்தாலும் இவர் என்னைப் புகழ்வதில்லை, இவர் என்னைப் புண்படுத்தவே இவ்விதம் சொன்னார் என நம் சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் வெளி உலகையும்  மக்களையும் சார்ந்து இருக்கிறோம்.
       
         எல்லோர் வாழ்விலும் பல விதமான சம்பவங்கள் வாயிலாக இறைவன் பாடங்கள் கற்றுக் கொடுக்கிறார். அதை எந்த அளவு நாம் உணர்ந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறுகிறோம் என்பதே முக்கியம். பணம், கல்யாணம், நல்ல வேலை, குழந்தைகள் இவையெல்லாம் ஒரு மனிதனின் உண்மையான வெற்றியைக் குறிப்பவை அல்ல. நமது சாஸ்திரங்களின் படி ஒரு மனிதனின் உண்மையான முன்னேற்றம் அவன் மனதளவில் எவ்வளவு உயர்ந்திருக்கிறான் , எவ்வளவு தன்னை உணர்ந்திருக்கிறான் என்பதுவே.

       பல நேரங்களில் நம் மனம் நாம் சொல்லும்படி கேட்பதில்லை. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசை. ஆயினும் நிலா வளர்ந்து தேய்வது போல நம் மனமும் படு உற்சாகமாக சில சமயங்களிலும் படு சோர்வாக சில நேரங்களிலும் ஆட்டம் காட்டவே செய்கின்றது. எதுவுமே வாழ்க்கையில் சரியில்லை , எல்லாமே ஏடாகூடமாக இருப்பது போல் சில சமயங்களில் தோன்றும். சில நேரங்களில் என்னே வாழ்க்கை , இப்படி ஒரு கணவர், இப்படி ஒரு மனைவி , இப்படிப் பட்ட சொந்தங்கள் என மனம் நெகிழ்ந்து போவோம்.

       சந்தோஷ வெள்ளத்தில் மலை ஏறாமலும் , துக்கத்தில் படு குழியில் விழாமலும் இருக்க பகவானின் பாதங்களைப் பற்றுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. எந்த சூழ்நிலையிலும் பகவானைப் பற்றிக் கொண்டு நிகழ்வுகளின் உண்மையைப் புரிந்து கொண்டு நம் மனதை ஒரு நல்ல நண்பனாக பாவித்து மனதிற்கு எடுத்துக் கூற மனம் தெளியும்.

     வாழ்க்கை மிகக் குறுகியது. நாம் படிக்க வேண்டிய பாடங்களோ எத்துனை பிறவிகள் எடுத்தாலும் படித்து முடிக்க முடியாத அளவிற்கு பெருங்கடல். இருக்கும் நாட்களை நன்கு பயனுற உபயோகித்து குருவின் மூலம் வேதாந்த பாடங்களைப் படிப்பது நம் மனதை நன்கு பக்குவப் படுத்தும். நம் மனம் எவ்வளவு தெளிவடைகிறதோ, அவ்வளவு தூரம் நம் வாக்குத் தெளியும். வாழ்க்கை அழகாகும். வாழ்வின் அர்த்தம் புரியும். எதற்கு இந்தப் பிறவி என்பது விளங்கும். நல்ல சுற்றமும் நட்பும் கிடைக்கும். வாழ்க்கைப் பயனுள்ளதாகும்.

     வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நாம் அணுகும் முறையைக் கொண்டே சரி செய்து விடலாம். 'Living in the present' - நம்மில் பலர் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளிலோ அல்லது எதிர் காலத்தில் வரும் என்று நாம் நம்பும் பிரச்சனைகளிலோ காலத்தை வீணடிக்கிறோம். இது ஒரு வகையான மன நோய். இந்த நோய் என்னைப் பீடித்து நான் வீணடித்த, தூக்கமின்றித் தவித்த நாட்கள் பல. மிகுந்த முயற்சிக்குப் பின்னர் நான் இதிலிருந்து வெளி வந்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். இதனை ஆங்கிலத்தில் 'presuming things' என்று சொல்லலாம். நமக்கு நடந்த கசப்பான அனுபவங்களைக் கொண்டு இனி வரும் அனுபவங்களும் அப்படியே அமையும் என்று எண்ணிக் குழம்புவது. இதனால் பல நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் வெறும் குற்றங்களையே கண்டு மனம் கலங்குகிறோம்.

     ஏதோ ஒரு நேரத்தில் நம் மனம் புண்படும்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கலாம்.  அவர் என்னை நடத்திய விதம் தவறு, நான் செய்த உதவியை அவர் மறந்து விட்டார் இது போல எத்தனையோ வருத்தங்கள் நம் மனதை அழுத்தும். அப்போதைக்கு போனால் போகிறது போ, நான் அதைப் பொறுத்துக் கொண்டேன் என்று சமாதானங்கள் சொல்லலாம். இவையெல்லாம் தற்காலிகமாக நம் மனதை சாந்தப் படுத்தும். ஏதோ ஒரு சின்ன சம்பவம் கடந்த கால ரணங்களை கிளறி மனதை உசுப்பேத்தி அழச் செய்யும். எனவே மனதை நல்ல நண்பனாக பாவித்து எடுத்துக் கூறியோ, நம் அபிமானத்திக்கு உரியவரிடம் ஆலோசித்தோ ஒரு தீர்வு கண்டு கன்வின்ஸ் ஆவது அவசியம்.

   நிகழ் காலத்தில் மட்டுமே வாழ்வது ஒரு பெரிய வரம். இந்த நாளை சரி வர உபயோகப்படுதினோமா ? நேரத்தை வீண் செய்யாது ஏதேனும் உருப்படியாகக் கற்றோமா ? சோம்பல், மனச் சோர்வு இன்றி இருந்தோமா? நம் அலுவல்களை உற்சாகமாக ஆற்றினோமா? தர்மத்தின் படி நடந்தோமா? இவற்றில் மட்டுமே நம் மனம் செல்லப் பழக்கப் படுத்த வேண்டும்.

    எல்லா விதமான மனம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளுக்கும் வேதாந்த கல்வியும், இறை சார்ந்த வாழ்க்கை முறையுமே தீர்வு. உண்மையான சிரத்தையோடு படிப்பவர்க்கு வேதாந்தம் கரை காட்டாமல் போகாது. இது பரம சத்தியம். மனத்தெளிவோடும், உடல் ஆரோக்கியத்தோடும் , நேர்மையான தர்மமான செழுமையான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஈஸ்வரன் நமக்கு அனுக்கிரகம் பண்ணட்டும்.



   
 
         

No comments:

Post a Comment